மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முறுக்கு மீசை, சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள் ஆகும்.
1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பன்முகங்கள் கொண்டவராகப் பாரதியார் விளங்குகின்றார்.
தனது கவிதைகளில் சமூக சீர்திருத்த கருத்துகளையும், தேச பக்தியையும் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்த பாரதியாரின் பணி, விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானது. சங்க காலப் புலவர்கள் பிடியில் இருந்த புரியாத தமிழை, மக்களுக்கான எளிய தமிழாக மாற்றிய சுடர் மிகும் அறிஞராக பாரதி திகழ்ந்தார்.
பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றளவும் கனவு நாயகனாகத் திகழ்கிறார் பாரதியார். தனது மாறுபட்ட சிந்தனைகளினால் மூட நம்பிக்கைகளையும், முரண்களை உடைத்து, பிற ஆளுமைகளில் இருந்து பாரதியார் சற்றே வேறுபடுகிறார்.
நூற்றாண்டுக்கு முன் பாரதியார் எழுதிய கவிதைகள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துபவையாகவே உள்ளன. சமூகத்தின், தமிழுலகின் விலைமதிப்பில்லா பொக்கிஷமான பாரதியாரின், சாகாவரம் பெற்ற படைப்புகள் காலங்களைக் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.