இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.
கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடக்கவிருப்பதாகவும் அதற்காக பிரபலங்கள் மொகாலி செல்வதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அது பொய் என கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோலி இத்தாலிக்கு அனுஷ்கா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில் கோலி, அனுஷ்காவுக்கு நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து வரும் கோலியின் இரண்டாவது இன்னிங்ஸ் இது. வாழ்த்துகள் விருஷ்கா என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. திருமணம் பற்றிய செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.