இரண்டு நிமிடங்களில் கலைந்த அரசியலமைப்பு பேரவை!

புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழிநடத்தல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை குறித்த அரசியலமைப்பு பேரவையின் இறுதி நாள் விவாதம், உரையாற்றுவதற்கு உறுப்பினர்கள் இல்லாததால் இரண்டு நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

maithriசிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அரசியலமைப்புப் பேரவையாக ஒன்று கூடியது.

இதில் இடைக்கால அறிக்கை குறித்த இறுதிநாள் விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றுக்காலை 11.30 மணி தொடக்கம், மாலை 6.30 மணி வரையான 7 மணிநேரம் இடைக்கால அறிக்கை குறித்த விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் உரையாற்றுவதற்கு, 10 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

எஸ்.எம்.சந்திரசேன, அசோக பிரியந்த, மகேந்த திசநாயக்க, ரவீந்திர சமரவீர, அனோமா கமகே, அமீர் அலி, சத்துர சேனாரத்ன, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, லக்கி ஜயவர்த்தன, வஜிர அபேவர்த்தன, என்று, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேரின் பெயர்களும் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டன.

எனினும் அவர்கள் எவரும் சபையில் இல்லாதததால், இரண்டு நிமிடங்களில் இந்த விவாதத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 23ஆம் நாளுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.