சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, நேற்று முன்தினம் கொழும்பு வந்தார்.
அவர் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக சிறிலங்காவின் அரச மற்றும் பாதுகாப்பு தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தவே கொழும்புக்குப் பயணமாகியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளின் விமானப்படைகளினதும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும், சீனக்குடாவில் உள்ள சிறிலங்கா விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்து வெளியேறும் விமானப்படையினரின் அணிவகுப்பை இந்திய விமானப்படைத் தளபதி பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விமானப்படைத் தளபதி ஒருவர் சிறிலங்கா விமானப்படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இது என்றும் கூறப்படுகிறது.