ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கை பெண் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு பேஸ்புக் ஊடாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இலங்கை பணிப்பெண் தான் பணி செய்யும் வீட்டின் உரிமையாளரின் தங்க சங்கிலியை திருடியுள்ளார். பின்னர் பேஸ்புக்கில் அவரால் பதிவிடப்பட்ட புகைப்படத்தின் ஊடாக அவர் சிக்கிக் கொண்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு ஷார்ஜா நீதிமன்றில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை பணிப்பெண் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படத்தில் அவரால் திருடப்பட்ட தங்கச் சங்கிலி காணப்பட்டதனை உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அதற்கமைய ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில், பணியிடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என இலங்கை பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த பணிப்பெண் ஒரு எமிரேட்ஸ் குடும்பத்தில் பணி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. புகைப்படத்தை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.
பணிப்பெண்ணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது தான் திருடவில்லை என குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பின்னர் குப்பைத்தொட்டியில் இருந்து தங்க சங்கிலியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் அந்த தங்க சங்கிலியை திருடவில்லை எனவும், தான் பணி செய்யும் வீட்டு உரிமையாளரே தன்னிடம் அதனை வழங்கியதாகவும் இலங்கை பெண் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அது தங்கம் என தனக்கு தெரியாது என்பதால் அதனை குப்பைத் தொட்டியில் போட்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.