தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா கொரியத் தீபகற்பத்தில் கடற்படை பயிற்சியை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த பயிற்சியில் மூன்று நாடுகளின் போர்க் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவாசோங்-15 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரிய கடந்த மாதம் மேற்கொண்டது. இந்தப் பரிசோதனை அயல் நாடுகளான அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் அமைந்தது.
இதனால் அச்சமடைந்த மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து அமெரிக்க நேரப்படி நேற்று திங்கட்கிழமை மாலை முதல் கூட்டு கடற்படை பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
போர் கப்பல்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகள் தமது கண்டத்தை தாக்க வருவதை அறிந்து, அவற்றை இடை மறித்து தாக்குவதற்குரிய சோதனைகளை நடத்துவதில் மூன்று நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்த போர் ஒத்த்திகை தேவைப்படும்போது தொடர்ந்து இடம்பெறும் எனவும் ஜப்பான் கூறியுள்ளது.
கூட்டு போர் ஒத்திகையினால் கொரிய தீபகற்பத்தில் வெடிச் சத்தம் தொடர்ந்து கேட்பதாக கூறப்படுகின்றது.
இந்தப் பயிற்சியில் அமெரிக்காவின் நாசகார கப்பல்களும் அதி நவீன விமானங்களும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய கடல்வழி போர் ஒத்திகையெனவும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.
அதேவேளை இந்த கூட்டு பயிற்சிக்கு எதிராக வடகொரியாவும் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பாக பாரிய போர் ஒத்திகை ஒன்றுக்குத் தயாராக இருப்பதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.