தமிழகத்தில் டையிங் தொழிலாளி ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(19), இவர் கடந்த ஜூன் மாதம் தன் நண்பர் கலைச்செல்வன் என்பவர் மூலம் திருப்பூர் சென்று வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அதன் பின் இவர்கள் இருவரும் சின்னக்கரை என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.
வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலே பணி செய்து கொண்டிருந்த போது பாலமுருகனின் கண்ணில் ஆசிட் பட்டதால், அவரது இடது கண் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாலமுருகன் அதன்பிறகு அந்நிறுவனத்தில் பணியாற்றவில்லை.
இந்நிலையில் பாலமுருகன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க சென்றுள்ளார்.
அதில், அந்த டையிங் நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்த எனக்கு எந்தவொரு பயிற்சியும் தராமல் நேரடியாகப் பணியாற்றச் செய்தனர்.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஆசிட், என்னுடைய இடது கண்ணில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அப்போதைக்கு மட்டும் மருத்துவச் செலவை செய்த டையிங் நிறுவனத்தார், பின்னர் நிறுவனத்திலிருந்து என்னை வெளியேற்றி அனுப்பிவிட்டனர்.
தற்போது என்னுடைய இடது கண் பார்வை முற்றிலும் பறிபோயிருக்கிறது, தலைவலியும் அடிக்கடி ஏற்படுகிறது.
மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருக்கும் நான், மீண்டும் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் கேட்டு, சம்பந்தப்பட்ட டையிங் நிறுவனத்தை அணுகினேன்.
ஆனால் அவர்கள் பணம் தரமுடியாது என்று கூறிவிட்டனர். எந்தப் பொருளாதார வசதியும் இல்லாமல், கண் சிகிச்சை மேற்கொள்ள வழியின்றித் தவிக்கும் என்னை, கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.