மன்னாரில் வீடொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் மரணம் கொலையென உடற்கூற்று பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
மன்னார் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்டனிஸ்லஸ் நளின் குரூஸ் (வயது 29) என்னும் இளைஞரே கடந்த ஒன்பதாம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பேசாலை 8ஆம் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை(7) இரவு வீட்டார் அனைவரும் நிகழ்வுக்குச் சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நிகழ்விற்குச் சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பிய போதும் இளைஞர் நித்திரையில் இருப்பதாக நினைத்து அவர்கள் இளைஞரை எழுப்பாது இருந்துள்ளனர்.
மறுநாள் வெள்ளிக்கிழமை(8) நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாத நிலையில் சந்தேகம் கொண்டு உறவினர்கள் இளைஞரை எழுப்ப முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே அவர்கள் இளைஞன் உயிரிழந்துள்ளதை அறிந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக பேசாலைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வவுனியாவில் இருந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த நீதவான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.
குறித்த சடலத்தை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி, இளைஞரின் மரணத்தில் சந்தேகம் கொண்டு சட்ட வைத்திய நிபுணரின் பார்வைக்கு சிபார்சு செய்திருந்தார்.
சட்ட வைத்திய நிபுணர் சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தி, கயிற்றை ஒத்த ஓர் பொருளினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளைஞரின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.