மீண்டும் கலைஞர் கருணாநிதி!!

ஓராண்டுக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வருகை தர இருக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி பிரசார மேடைகளில் கருணாநிதியை அமர வைப்பதற்கான சூழல்கள் குறித்தும் விவாதிக்கப்படுகின்றன.அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு ஜெயலலிதா சென்றால் செய்தி அறிவாலயத்துக்கு கருணாநிதி வரவில்லையென்றால் செய்தி எனக் கூறும் அளவுக்கு அறிவாலயத்தில் கருணாநிதி கால்பதிக்காத நாட்களே இருந்தது இல்லை. உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அதே நாட்களில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதற்கு முன்னதாக அவரது உடலில் ஏற்பட்ட கொப்புளங்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். திடீரென மூச்சுத் திணறல் அதிகமானதால் காவேரியில் அனுமதிக்கப்பட்டார்.மூச்சுத் திணறலை சரிசெய்வதற்காக அவரது தொண்டையில் இடப்பட்ட ட்ரக்கியோஸ்டமி குழாய்கள் இன்னும் நீக்கப்படவில்லை. உடல்நலம் பாதிப்ப்பு கடந்த ஓராண்டாக கோபாலபுரம் இல்லத்திலேயே இருக்கும் கருணாநிதிக்கு, தொடக்க நாட்களில் தன்னை சந்திக்க வரும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என யார் வந்து பார்த்தும் அவர்களை அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.ஆனால், கடந்த சில வாரங்களாக தன்னைச் சுற்றியிருப்பவர்களை அடையாளம் கண்டு கொண்டார். பிரதமர் மோடி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தபோது, வாசலில் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்துக் கையசைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது.அறிவாலயத்தில் அன்பழகன் ஆய்வு அவரது உடலில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு குடும்ப உறுப்பினர்களும் திமுக உடன்பிறப்புகளும் உற்சாகம் அடைந்தனர். தற்போது கருணாநிதியின் உடல்நிலையை தனி மருத்துவர் குழு கண்காணித்தாலும் உதவியாளர் நித்யாவும் செல்வியும்தான் உடனிருந்து கவனித்துக் கொள்கின்றனர். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுப் பொருட்களே கொடுக்கப்படுகிறது. வீட்டிலே அமர்ந்திருப்பதைவிட, அறிவாலயம் வந்தால் கருணாநிதியின் உடல்நிலை இன்னும் மேம்படும் என குடும்ப உறுப்பினர்கள் பேசி வந்தனர். இதையே தி.மு.க பொதுச்செயலர் அன்பழகனும் எடுத்துக் கூறினார்.இதையடுத்து அறிவாலயத்தில் கருணாநிதி இதுவரை அமர்ந்திருந்த அறையை சீரமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அவர் அமரும் இடம் உட்பட அனைத்தையும் ஆய்வு செய்துவிட்டுச் சென்றார் அன்பழகன்.ஆர்கே நகரிலும் தலை காட்டுகிறார்? இன்னும் இரண்டு நாட்களில் அறிவாலயம் வர இருக்கிறார் கருணாநிதி. தொண்டர்களைப் பார்த்து கை அசைப்பது, புன்னகைப்பது உள்ளிட்டவை மட்டுமே நடக்கும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் ஆர்.கே.நகர் களத்திலும் அவரைக் கொண்டு போய் நிறுத்தும் முடிவில் செயல் தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். 12 மாதங்களுக்குப் பிறகு அறிவாலயத்துக்கு கருணாநிதி வருவதால், தடபுடல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.