திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி, கூலிப்படைக் கும்பல் ஒன்று வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. ஆனால், கெளசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். சங்கரோ பரிதாபகரமாக உயிரிழந்தார்.
சங்கர் மற்றும் கெளசல்யா ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காரணத்தினாலேயே, அவர்கள் இருவர் மீதும் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கூறி கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பினை வழங்கியுள்ளது திருப்பூர் நீதிமன்றம்.
சங்கர் கொலை வழக்கின் முதல் குற்றவாளி சின்னசாமிக்கு தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி. அதேபோல சங்கரை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சங்கரின் தந்தைக்கும், கௌசல்யாவுக்கும் 11.95 இலட்சம் இழப்பீடு வழங்கிடக்கோரியும் அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாதி – மதங்களை காரணம் காட்டி இத்தகைய ஆணவக்கொலைகளில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த வழக்கு ஓர் பாடமாக இருக்கட்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.