‘முன்னாள் காதலன் தொல்லைக்கொடுத்தான் தீர்த்துக்கட்டினோம்’- போலீஸை அதிரவைத்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள தேசவசமுத்திரம் பொன்மலை கோயில் அருகே கடந்த 10-ம் தேதி காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி சம்பவ இடத்துக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், கர்நாடகா மாநிலம் கனகபுரா அடுத்த கங்கிலிபுரா கிராமத்தைச் சேர்ந்த முட்லய்யாவின் மகன் கிருஷ்ணா வயது 32 என்பதும் தெரியவந்தது. இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணையில், கிருஷ்ணாவை கொலை செய்த கள்ளக்காதலி மம்தா உள்பட 3 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
krishnakiri_10265
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி திம்மராயகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் முரளி என்பவர் பழையபேட்டை காந்தி சாலையில் சிறிய அளவில் நகைக் கடை நடத்திவருகிறார். இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உஸ்தலஅள்ளி பகுதியைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே மம்தாவும், கிருஷ்ணாவும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். திருமணம் ஆன பின்பும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.

இதற்கிடையில், தற்போது மம்தாவுக்கு கிருஷ்ணகிரியில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி செவத்தான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கிருஷ்ணா அடிக்கடி மம்தாவை பார்க்க கிருஷ்ணகிரி வந்துள்ளார். இதுகுறித்து செவத்தான், மம்தாவிடம் கேட்டபோது, அவன், தனது முன்னாள் காதலன் என்றும், தொடர்ந்து என்னைத் தொல்லை கொடுத்து வருகிறான். அவனைத் தீர்த்து கட்டிவிட்டால் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி சனிக்கிழமை கிருஷ்ணாவை வரும்படி மம்தா, போனில் அழைத்துள்ளார். சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரி வந்த கிருஷ்ணாவை தேவசமுத்திரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, வெளியே வந்த கிருஷ்ணாவிடம், வீட்டுக்குச் செல்ல முடியாது. இதே பகுதியில் மறைவாக உள்ள இடத்துக்குச் சென்று சந்தோஷமாக இருக்கலாம் என அழைத்துச் சென்றுள்ளார். அதை நம்பிய கிருஷ்ணா, இருசக்கர வாகனத்தில் மம்தாவை உட்கார வைத்துக்கொண்டு, பொன்மலை கோயில் அடுத்துள்ள மறைவான பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு தயாராக நின்றிருந்த மம்தாவின் புதிய கள்ளக்காதலன் செவத்தான், அவனது நண்பன் சக்திவேல் இருவரும், கத்தியைக் கொண்டு கிருஷ்ணாவின் தலையில் அடிக்கவும் மயங்கி விழுந்துள்ளார். பிறகு கிருஷ்ணாவின் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் கிருஷ்ணாவின் கள்ளக்காதலி மம்தா, மம்தாவின் புதிய கள்ளக்காதலன் செவத்தான், இவரது நண்பன் சக்திவேல் ஆகியோரை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.