நடிகர் ரஜினியின் முகத்திரையை கிழித்த கட்ஜு : இதைவிட அசிங்கம் வேறு இல்லை!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போலவே ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்திலேயே, நடிகர் ரஜினிகாந்த் தின் அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.அதில் அவர் கூறியது வருமாறு:-

“தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை” இவ்வாறு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் கட்ஜு.

‘ரஜினிகாந்த் தலையில் ஒன்றும் இல்லை’ என்ற காட்டமான விமர்சனத்துக்கு, பொளேர் பதிலை ரஜினிகாந்த் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மவுனத்தையே பதிலாக கொடுத்தார் ரஜினி. விவசாயிகள் பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றில் தனது அக்கறை, ஆதரவு போன்றவற்றை தேவைப்படும்போது வெளிப்படுத்திவிட்டு மவுனமாகி விடுகிறார் ரஜினி.

அதேவேளையில் ‘ரஜினிகாந்த் தலையில் ஒன்றும் இல்லை’ என்று, கட்ஜு காழ்ப்புணர்வில் கூறுவதாக ரஜினி ரசிகர்கள் வாதிடுகிறார்கள். தனது ரசிகர்களுக்கு ரஜினி கூறும் ஆலோசனைகள்தான் அவரது கொள்கைகள் என்று அவரது ரசிகர்கள் விளக்கம் தருகிறார்கள்.

“வாய்ப்புகள் உங்களைத் தேடிவராவிட்டால் நீங்கள் வாய்ப்புகளை தேடிச் செல்லுங்கள்” “குடிப்பழக்கத்தால் உடம்பு மட்டும் கெட்டுப் போகாது. மைண்டும் கெட்டுப் போகும். அது வேண்டாம்” என்பது போன்ற ரஜினியின் அறிவுரைகள் உண்மையில் நல்ல கொள்கைகள் என்று வாதிடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.