நடிகர் ரஜினிகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் இன்று (செவ்வாய்க்கிழமை). அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை
1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.
2.திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.
3.ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.
4. 22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.
5.ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
6.அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.
7. திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.
8.போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.
9. நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் “அபூர்வ ராகங்கள்”(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.
10.அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
11.கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.
12.”நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்” என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.
13.எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.
14.”ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்”, என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
15.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.
16.”கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல” என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.
17.”என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்” என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.
18.அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் ‘கத சங்கமா’ என்ற படத்தில் அவர் நடித்தார்.
19.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
20.ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் “ப்ளட்ஸ்டோன்” 1988 ஆம் ஆண்டு வெளியானது.
21.”அவர்கள்”, “மூன்று முடிச்சு”, “16 வயதினிலே” படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.
படத்தின் காப்புரிமை Getty Images
22.கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.
23.இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் “நினைத்தாலே இனிக்கும்”
24.முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய “பைரவி”(1978).
25.பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
26.ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.
27.”ஆறிலிருந்து அறுபது வரை”(1979), “ஜானி”(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.
28.நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.
29.கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய “நெற்றிக்கண்”(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
30.இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் “மூன்று முகம்”(1982).
31.”நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்கு முதன் முதலில் ‘ஃபிலிம்ஃபேர்’ விருது பெற்றார் ரஜினி.
32.ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த “வள்ளி” திரைப்படம் 1993ல் வெளியானது.
33.90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.
34.”மன்னன்” படத்தில் ‘அடிக்குது குளிரு’ என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.
35.”ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்” என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.
36.”நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”, “பேர கேட்டாலே சும்மா அதிருதுல” போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.
படத்தின் காப்புரிமை STRDEL/GETTY
37.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.
38.”அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.
39.1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
40.2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை மறுத்துவிட்டார்.
41.தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவின் முடிவை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.
42.இவர் நடித்து இங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான “முத்து” திரைப்படம் ஜப்பானில் வெளியாக, அங்கு ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரஜினி.
43.ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் புகை பிடிக்கவில்லை, அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.
44.”அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக “எஜமான்” படத்தில் நடித்திருந்தார்.
45.2002 ஆம் ஆண்டு வெளியான “பாபா” திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைய, தனது சொந்த பணத்தை விநியோகஸ்தர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினிகாந்த்.
46.ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மன அமைதி கிடைப்பதாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.
47.இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார் ரஜினி
48.கேமரா மேன், லைட் மேன் யாராக இருந்தாலும் ஒரே அளவிலான மரியாதையை அவர் தருவார் என திரைப்படத்துறையினர் பலரும் கூறியுள்ளனர்.
படத்தின் காப்புரிமை Getty Images
49.அறிவியல், ஆண்மீகம், அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிப்பார் ரஜினி.
50.அவருடைய பழைய உடைகள், புகைப்படங்கள், கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.
51.புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி தங்கும் அரை ஒன்று உள்ளது. அங்கு படப்பிடிப்பு இருந்தால் அவர் அங்குதான் தங்குவார்.
52.இந்திய அரசின் மிக உயரிய ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’ ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
53.ரஜினியை “அதிக செல்வாக்கு மிக்க இந்தியர்” என 2010 ஆம் ஆண்டு ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ இதழ் குறிப்பிட்டது.
54.கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
55.படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார் என அவருடன் நடித்த பலர் கூறியுள்ளனர்.
56.படப்பிடிப்பிற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ தன் காரை தானே ஓட்டிச்செல்ல விரும்புபவர் ரஜினி.
57.2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த “எந்திரன்” திரைப்படம், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று.
படத்தின் காப்புரிமை Getty Images
58.எந்திரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக் குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.
59.இதே போல ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாட திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
60.1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் “என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்” என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
61.பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் ஆவர்.
62.ரஜினியை பாராட்டி தனது “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் “லுங்கி டான்ஸ் ” என்ற பாடலை வைத்து அதற்கு நடனமாடியுள்ளார் ஷாருக்கான்.
63.2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்த ரஜினி, நிவாரணத் தொகையாக 10 கோடி ரூபாய் அளித்திருந்தார்.
64.ரஜினிகாந்த் 2014ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் நாளிலேயே அவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர்.
65.தற்போது எந்திரன் 2.0, காலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
66.2017ல் ரஜினி அரசியலில் நுழைவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்திருந்தார்.
67.ஆனால் சமீபத்தில், “அரசியலுக்கு வர இப்போது அவசரம் இல்லை” என்று ரஜினி கூறிவிட்டார்.