ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பருத்தித்துறை நகரசபைக்கான வேட்பாளர்கள், கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று முந்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90-2-5எதிர்வரும் உள்ளூராட்சித்  தேர்தலின்போது, மேற்படி கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள, பருத்தித்துறை நகரசபையின் தலைமை வேட்பாளரான ஆயுர்வேத வைத்தியர் வானதி ஸ்ரீகணேசன் தலைமையிலான வேட்பாளர்களே குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், தாம் பருத்தித்துறை நகரசபையைச் சார்ந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவே மேற்படி கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ மிக விரைவில் மீண்டும் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் களமிறங்கவுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதன் யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் தலைமையில் மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.