மருத்துவதுறையினர், சட்டத்தில் உள்ள பலவீனத்தை பயன்படுத்தி மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களை செய்யக்கூடாது என வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமித்தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நேற்று(12) கொழும்பில் இருந்து குழுவினர் யாழுக்கு வருகை தந்திருந்தனர்.
அவர்களுடைய விசாரணையில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் வடமாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …..
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டிருந்த நோயாளர்கள் 10 பேர், கண்ணில் கிருமி தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.
அதில் 4 பேர் முற்றாக பார்வை இழந்துள்ளார்கள். இந்த விடயம் குறித்து குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் வழங்கியதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளும் எடுத்திருந்தோம்.
இதேவேளை இந்த விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு மத்திய சுகாதார அமைச்சால் அனுப்பப்பட்ட குழு ஒன்று நேற்று குறித்த தனியார் வைத்தி சாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தை பரிசோதனை செய்ததுடன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரையும் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணைகளை நடாத்தியிருந்தார்கள்.
அந்தவகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்னுடன் சந்தித்து கலந்துiராயடடினார்கள், குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களை இதுவரை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் சரியான முறையில் அணுகவில்லை என்றும், இவ்வாறான பெரிய இழப்பு ஏற்பட்ட பின்பும் குற்ற உணர்வு இல்லாமல் எம்முடன் நடந்து கொண்டார்கள் என விசனம் தெரிவித்திருந்தனர்.
சுகாதார திணைக்களம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கேட்டிருந்தார்கள். உடனடியாக குறித்த வைத்திய சாலை மீது நடவடிக்கை எடுத்திருந்தோம். வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை கூடம் பூட்டப்பட்டது.
ஆனால் சில தினங்களின் பின்னர் கண் சத்திரசிகிச்சை கூடம் தவிர்ந்த ஏனைய சத்திர சிகிச்சை கூடங்கள் இயங்கின. தனியார் வைத்தியசாலைகள் மீது மேற்கொள்ளப்படும் சட்ட வழிவகைகளை நானும் ஆராய்ந்த போது, உத்தியோக பூர்வமாக நீதிமன்றை நாடி நடவடிக்கை மேற்கொள்ளும் அளவுக்கு எமது நாட்டில் சட்டம் வலுவுடையாதாக இருக்கவில்லை.
இது துரதிஸ்டவசமானது ஒன்று. தனியார் வைத்தியசாலைகளை கட்டுப்படுத்தக் கூடியதும் ஒழுங்குபடுத்தக்கூடியதுமான அதிகார மிக்க சட்ட வரைபு ஏற்படுத்தப்படாமல் இருப்பது விசனத்துக்குரியது.
வைத்தியசாலை என்பது மக்கள் நலனில் கரிசனை கொண்டதாக இருக்க வேண்டும். அதே போன்று மக்கள் விழிப்புணர்வாக இருக்கவும் வேண்டும். வைத்தியசாலைகள் சேவைக்குரியதாக இருக்க வேண்டும். வருமானத்தை இரண்டாம் பட்சமாக பார்க்க வேண்டும்.
தனியார் வைத்தியசாலைகள் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்காமல் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். சட்டத்தில் உள்ள பலவீனத்தை பயன்படுத்தி மனிதாபிமானத்துக்கு எதிரான செயல்களை செய்யக்கூடாது.
இந்த வைத்தியசாலைக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளன என்பது விசாரணைகளின் பின்னரே தெரிய வரும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் இடம்பெறாது நோயாளர்களின் நலனில் கரிசனையுடன் மருத்துவ பிரிவினர் நடந்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.