தேடுதல் தளமான கூகுள் தனது தேடுதல் பொறியில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் எந்தெந்த நாட்டில் எந்தெந்த விஷயங்கள் குறித்து மக்கள் அதிகளவு தேடியிருக்கிறார்கள் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளது.
1. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டது இர்மா சூறாவளி (HURRICANE IRMA) குறித்தே. இரண்டாவது இடத்தில் ஐஃபோன் 8 (iPhone 8), மூன்றாவது இடத்தில் ஐஃபோன் எக்ஸ் (iPhone X) ஆகியவை உள்ளன. இந்திய தேசிய கிரிக்கெட் அணி குறித்து உலகம் முழுவதும் அதிகம் தேடியுள்ளதால் இந்த வார்த்தையும் டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது.
2. உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட பாடல்கள்/பாடல் வரிகள் குறித்த பட்டியலில் டெஸ்பசீட்டோ (Despacito), ஷேப் ஆஃப் யூ (Shape Of You) ஆகியவை முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில் இங்கிலாந்து இளவரசரை மணக்கவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே முதலிடம் பிடித்துள்ளார்.
3. அதிகம் தேடப்பட்ட தேர்தல்கள் குறித்த பட்டியலில் பிரான்ஸ் தேர்தலே உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் ஜெர்மனி பொதுத் தேர்தலும், பிரிட்டன் தேர்தலும் உள்ளன. நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் உள்ளது.
4. இந்தியாவில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தை பட்டியலில், முதலிடத்தில் இருப்பது பாகுபலி 2.. ஐபிஎல் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. தங்கல் திரைப்படம் நான்காவது இடத்தில் உள்ளது.
5. ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து கூகுளில் தேடுபவர்கள் மிகவும் அதிகம். உதாரணமாக எப்படி செட்டிநாடு சிக்கன் குழம்பு வைப்பது, எப்படி நிலநடுக்கம் வரும் சமயங்களில் தற்காப்புகளை மேற்கொள்வது என தேடுவார்கள். அது போலவே இந்த ஆண்டு ‘எப்படி இதனை செய்ய வேண்டும்’ (How To…) என இந்தியர்கள் கூகுளில் தேடிய வாக்கியங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதாருடன் பான் கார்ட் எண்ணைஇணைப்பது எப்படி? என்பது குறித்தே இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளார்கள். ஜியோ மொபைலை முன்பதிவு செய்வது எப்படி? இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி என்பன உள்ளிட்ட கேள்விகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
6. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலில் சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் நடிகை அர்ஷிகானும், சப்னா சவுதரி என்ற பெண் மூன்றாவது இடத்திலும் வித்யா வாக்ஸ், திஷா படானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
7. ஒரு விஷயத்தை பற்றி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகம் தேடியது எதைத்தெரியுமா ஜிஎஸ்டி குறித்துதான். இரண்டாவது இடத்தில் பிட்காயின் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து அதிகம் தேடிய மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மூன்றாவது இடத்தில் கோவாவும் ஐந்தாவது இடத்தில் காஷ்மீரும் உள்ளன.