கணவரின் பிறந்தநாளிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முயன்ற பெண்ணிடமிருந்து கணவர் விவாகரத்து பெற்ற சம்பவம் ஒன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கணவன் மனைவி இருவரும் திருமணமாகி சவுதியின் அல் கெர்ஜ் நகரில் புதுமண தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவரின் பிறந்தநாளிற்கு கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த மனைவி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கணவருக்கு பிடித்த உணவுகளை வாங்குவதற்காக வாடகை உந்தில் (Taxi) சாப்பாட்டு விடுதிக்கு (Hotel) சென்று அங்கு கணவருக்கு பிடித்த உணவுகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் வாடகை உந்து பழுதடைந்து சாலையில் நின்றுள்ளது.
அந்த நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வீட்டுக்கு சென்று மனைவியை தேடியுள்ளார். மனைவி வீட்டில் இல்லாத நிலையில் கடும் கோபமடைந்துள்ளார் கணவர். பின்னர் சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டிற்கு வந்ததும் அவர்மீது கோபம் அடைந்து மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்தது மட்டுமல்லாமல் அவரிடம் விவாகரத்தும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்டின் Ain Al Youm பத்திரிகையிலேயே குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த செய்தி இணையத்தளங்களில் பரவிவருவதால் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் கணவனின் முன்கோபமே இந்த விவாகரத்திற்கு வித்திட்டுள்ளது என்று பலர் கூறியுள்ளனர்.