மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காணாமல்போன பாடசாலை மாணவர் ஒருவர் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவு கட்டுவன்வில பிரதேசத்திலுள்ள உணவு விடுதியொன்றில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், கலைமகள் வித்தியாலய வீதி, ஹிதாயத் நகரைச் சேர்ந்த, பதினைந்து வயதான அப்துல் கரீம் றியாஸ் அப்துல் ஷாலிஹ் என்ற மாணவன் கடந்த 13ஆம் திகதி இரவிலிருந்து காணாமல் போயிருந்ததாக பெற்றோர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த மாணவனின் தந்தை இதுகுறித்து தெரிவிக்கையில், “ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவன் வருட இறுதித் தவணை விடுமுறை கிடைத்ததும் நண்பர்களின் தூண்டுதலின் பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் தலைமறைவாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு தேடுதலிலும் ஈடுபட்டோம். இந்த நிலையில், கட்டுவன்விலவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியில் இருப்பதாகத் தகவல் கிடைத்து. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று அவரை மீட்டெடுத்தோம்” என்றார்.
பாடசாலை விடுமுறை காலங்களில் மாணவர்களை தமது கண்காணிப்பில் இருந்து மறையாத வண்ணம் அவதானத்தில் இருத்திக் கொள்ளுமாறு பொலிஸார் பெற்றோருக்கும் பாதுகாலவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.