மூன்றாவது பெரிய காட்டுத்தீ! கலிபோர்னியாவில் மக்களை வெளியேற உத்தரவு!

காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் சாண்டா பார்பரா பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு புதிய ஆணையை கலிபோர்னியா அதிகாரிகள் அளித்துள்ளனர்.

x_99240004_35f13334-bd0e-4a0b-a526-7b401026ac87.jpg.pagespeed.ic.Q85vWO61u2தாமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத்தீ வடக்கிலிருந்து வரும் காற்றின் காரணமாக பசிபிக் கடற்கரை பகுதியை அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிடப்பட்டதிலேயே மூன்றாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீயின் காரணமாக தீயணைப்புத்துறை அதிகாரியான கோரி ஐவர்சன் கடந்த வாரம் பணியின்போது இறந்துள்ளார். மேலும் வெர்ஜீனியா ரே பெசோலோ என்ற பெண்மணியும் இறந்துள்ளார்.

இன்று (17) காற்றின் ஈரப்பதன் குறைவாக இருக்கும் என்பதாலும் சாண்டா பார்பராவில் வடக்கு நோக்கி அடிக்கக்கூடிய சண்டவுனர் காற்றின் காரணமாகவும் தீ மேலும் பரவும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டெகிடோ மற்றும் சம்மர்லாண்ட் ஆகிய இடங்களில் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 750 வீடுகள் உட்பட 1000 கட்டடங்களை சேதப்படுத்திய இந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர 8,000 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் விமானம் மற்றும் கெலிஹாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றியதில் 40 சதவிகிதம் நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 104 மில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.