இனவாதத்தைத் தூண்ட முயற்சி: கரு ஜெயசூரிய!

நாடு முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது என இலங்கைப் பாராளுமன்றத்தின் சபா நாயகர் கரு ஜெயெசூரிய தெரிவித்துள்ளார்.

karu-jayasuriyaஅத்துடன், ஆசியாவில் 70 வருட ஜனநாயக அரசியலை கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டாலும், இந்த 70 வருட வரலாற்றில் இரண்டு அரசியல் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி கண்டிருந்ததாகவும் அதற்கும் மேல் நாட்டில் பயங்கரவாதம் ஏற்பட்டு, அவற்றினால் நாடு என்ற நீதியில் நாம் பின்தள்ளப்பட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காமினி திஸாநாயக்க மன்றத்தின் கற்கைநெறி நிறுவனத்தின் ஊடாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்கள், ஆளுமை விருத்தியாளர்கள், கணணி மற்றும் ஆங்கில அறிவு தொடர்பில் தமது டிப்ளோமா பட்டத்திற்கு தேர்ச்சி பெற்ற 250 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், கௌரவிக்கும் நிகழ்வும் நுவரெலியா அரலிய ஹோட்டலில் இன்று காலை இடம்பெற்றது.

 

மன்றத்தின் தலைவரும், பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் ரொட்ரி கழக உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை விட பொருளாதாரத்தில் மேம்பட்டு காணப்பட்டோம். அவ்வாறு முன்னேற்றம் கண்ட இலங்கை தற்போது பின்னடைந்துள்ளது. தற்போது பின்னடைந்துள்ளதை மாற்ற முடியுமா? என்பதே எமது தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் ஆராய ஒரு ஆணைக்குழு என பல சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி அவற்றை செயற்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். அதற்கமைய எதிர்காலத்தில் நீதியானதும், சுயாதீனதுமான தேர்தல் ஒன்று நடைபெறும் என நம்புகின்றேன்.

முன்னைய ஆட்சியில் தேர்தல் நடைபெற்ற விதம் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள். இன்று அவ்வாறு அல்ல. அரச சொத்துக்களை வீணாகப் பயன்படுத்த முடியாது என்பதோடு பண வீண்விரயத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறுகின்றது. அவ்வாறான சூழலில் மக்கள் தமது பிரதிநிதிகளை தமது விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இந்த நிலையில் நாட்டை மீண்டும் பிளவுபடுத்த, நாட்டில் இனவாதத்தை தூண்ட பலர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதை எண்ணி நான் கவலையடைகின்றேன். இறந்த காலத்தை அழித்துக்கொண்டது போல் எதிர்காலத்தையும் அழித்துக்கொள்ள இடமளிக்க முடியாது.  நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இனத்தையோ மதத்தையோ கேட்பதில்லை. ஆகவே தேவையற்ற விதத்தில் நாட்டு மக்களை குழப்பி, அவர்களை தூண்டிவிடுவோர் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களாகவே கருதப்படுவர்” என்றார்.