கல்வி அமைச்சின் வளங்களை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் இலவச சீறுடைகளை வழங்குவதில் அதிபர்கள் மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட பாடசாலைகளில் அமைந்துள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட நிதி மற்றும் மாணவர்களுக்கு இலவச சீறுடைகளை வழங்குவதில் பாடசாலை அதிபர்கள் மோசடி ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கல்வி இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு சில அதிபர்கள் பாடசாலைகளுக்கு நிதி கிடைத்தவுடன், நிதிக்கு பொறுப்பான ஆசிரியர்களை பதவி நீக்கம் செய்து விட்டு அந்த பொறுப்பை தனக்கு கீழ் கொண்டுவந்துள்ளனர்.
அது, மட்டுமன்றி சிலர் பாடசாலைக்கு வழங்கப்படும் இலவச சீருடையை கொண்டு துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் உரிய முறையில் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான சுற்று நிருபமொன்றை விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.