ராகுல் காந்திக்கு தமிழகத்தில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், “வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. பல்வேறு சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். எதிர்காலத்தில் காங்கிரசை ஆளுங்கட்சியாக அவரால் மாற்ற முடியும். பா.ஜனதாவுக்கு மாற்று என்பது அகில இந்திய அளவில் காங்கிரஸ் மட்டும் தான். பல தலைவர்கள் இருந்தாலும் மோடிக்கு மாற்று ராகுல்காந்தி தான்” என தெரிவித்தார்.
மேலும், “காங்கிரஸ் ஆட்சிக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் சென்னை அல்லது தமிழகத்தின் மத்திய பகுதியில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தவுள்ளோம். இந்த கூட்டத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.