மத்திய பிரதேசம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த ராஸக் கான் தனது மனைவி வழி சொந்தமான 12-வயது சிறுமியை கல்யாண விளையாட்டு விளையாடுவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு 2 மாதங்களாக வீட்டிலேயே அவளைச் சிறை பிடித்து வைத்துள்ளார்.
சயதேபுரா பகுதியைச் சேர்ந்த ராஸக்கின் மனைவி சிறிது நாட்களுக்கு முன்பு இவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ள நிலையில் அவருடைய சொந்தக்கார சிறுமியான இவளைத் திருமணம் செய்து கொள்ள இவர் தீர்மானித்துள்ளார்.
அதற்கான திட்டத்தின் முதல் படியாக சிறுமியின் தாய் வழி பாட்டி சிறுமியைச் சந்திக்க விரும்புவதாகக் கூறி ராஜஸ்தானில் இருந்து சிறுமியை தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
தன்னுடைய தந்தை ரேயிஸ் ஷா-வை சிறுமியின் பாதுகாவலர் என்று கூறி, வழக்கறிஞராக இருக்கும் தன்னுடைய சகோதரன் அப்துல் மற்றும் ஹாஃபிஸ் ஜாஹித், அஷ்ஃபக் அலி, அஃப்சர் அலி ஆகியோர் முன்னிலையில் திருமணத்தை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
இந்தத் திருமணம் சட்டப் பூர்வமாக செல்லாது என்பதால் சிறுமியின் வயதை 18 என்று பொய்யாக பதிவு செய்து இந்தத் திருமணத்திற்கான அங்கிகாரத்தை இவர்கள் பெற்றுள்ளனர்.
சிறுமி என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய போது, நாம் அனைவரும் சேர்ந்து பொம்மை கல்யாண விளையாட்டு விளையாடுவதாகக் கூறி சிறுமியை நம்ப வைத்து இருக்கிறார்கள்.
மேலும் இதைப் பற்றி வேறு யாரிடம் சிறுமி கூறிவிடக் கூடாது என்பதற்காக 2 மாதங்களாக அவளை வீட்டிலேயே அடைத்து வைத்து இருக்கிறார்கள்.
பாட்டியைப் பார்க்க சென்ற குழந்தை திரும்பி வராததால் சிறுமியின் தாய் இவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் தன் மகளுக்குத் திருமணமாகி விட்டது என்பது இவருக்குத் தெரிய வந்துள்ளது.
பின்னர் காவலர்களின் உதவியோடு அந்த வீட்டிற்குச் சென்று தனது மகளை இவர் மீட்டுள்ளார். தன் அம்மாவைப் பார்த்தவுடன் அழுது கொண்டே சிறுமி நடந்ததை எல்லாம் தெரிவித்துள்ளார்.
ராஸக்கை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது குழந்தை திருமணம் போன்ற பல பரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தனது பள்ளி விடுமுறையைப் பாட்டி வீட்டில் சந்தோஷமாக கழிக்க வந்த நிலையில், அவரது வாழ்வையே திசைதிருப்பும் அளவிற்கான சம்பவங்கள் சிறுமியின் வாழ்கையில் நடந்திருப்பது அவரது குடும்பத்தினரை சோகத்தின் ஆழ்த்தியுள்ளது.