வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ஒருவரின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றிய யாழ் புறநகர்பகுதியை சேர்ந்த 58 வயதான ஒருவரின் வேலையே பறிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட சமயத்தில்- கடந்த வார இறுதியில் பிரதம செயலாளரை சந்திக்க அனந்தி சென்றுள்ளார். அந்த சமயத்தில் காவலாளி, அனந்தியை கவனிக்காமல் கதிரையிலேயே உட்கார்ந்திருந்திருக்கிறார். இதை அவதானித்த அனந்தி, அந்த காவலாளியை அழைத்து “ஐயா.. என்னை தெரிகிறதா“ என கேட்டுள்ளார்.
அனந்தியை மேலும் கீழும் பார்த்த அந்த காவலாளி “இல்லை பிள்ளை…தெரியவில்லை“ என பதிலளித்துள்ளார். “ஐயா நீங்கள் பேப்பர் ஒன்டும் படிக்கிறதில்லையோ“ என அனந்தி கேட்க, “இல்லையம்மா“ என்றுள்ளார்.
“இப்பிடியான முக்கிய இடங்களில காவலாளியாக இருக்கிற நீங்கள் பேப்பர் எல்லாம் படிச்சு கொஞ்சம் ஜென்ரல்நொலேட்ஜை வளர்க்க வேணுமில்லோ“ என்றுள்ளார். “சரி.. நீ யாரம்மா” என காவலாளி கேட்க, அனந்தி பேசாமல் அலுவலகத்திற்குள் சென்றார்.
அன்றே காவலாளி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
காவலாளி குறித்து பிரதம செயலாளருக்கு அனந்தி முறையிட்டதையடுத்தே, அவர் பதவிநீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அனந்தியை நேற்றிரவு தொடர்புகொண்டு தமிழ் பக்கம் வினவியபோது, “நான் பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு சென்றேன்.
அங்குள்ள காவலாளி என்னுடன் மரியாதையில்லாமல் நீ என ஒருமையில் பேசினார். இதை பிரதம செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவ்வளவுதான் நடந்தது“ என்றார்.
இது தொடர்பாக பிரதமசெயலாளரை தொடர்புகொள்ள முயன்றபோதும், இன்று காலைவரை அந்த முயற்சி பலனளிக்கவில்லை.