யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுக்கள் தற்பொழுது மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் பொது அணிக்கு சமூக அமைப்புக்கள், தமிழ் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன உள்வாங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவை குறித்த பொது அணிக்காக பெறுவதற்கு தற்போது பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
முக்கியமாக, வடக்கு மாகாண முதலமைச்சர், க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் இடம் பெறுவதாக அறியமுடிகின்றது. இதுதவிர, வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதோடு, இந்து மத அமைப்பான சிவ சேனை இந்த அணியுடன் இணையாமல் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளதென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.