இராணுவப் பயிற்சி, புலனாய்வுப் பரிமாற்றங்கள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு மலேசியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் இணக்கம் கண்டுள்ளனர்.
சிறிலங்காவுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று வந்த மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் பின் துன் அப்துல் ரசாக்கிற்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று அரசுமுறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக் பேச்சுக்களை நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிறிலங்கா அமைச்சர்களும், மலேசிய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இதன் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலக அரங்குகளில் சிறிலங்காவுக்கு மலேசியா அளித்து வருகின்ற ஆதரவுக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மலேசியப் பிரதமர், மேனித உரிமைகள் தோடர்பான மேற்குலகின் கருத்துக்களுடன் தமது நாடு இணங்குவதில்லை என்றும், அதனை ஏனைய நாடுகளின் மீது மேற்குலகம் திணிக்க முனைவதாகவும் குற்றம்சாட்டினார்.
மலேசியப் பிரதமரின் இந்தக் கருத்துடன், தாமும் இணங்குவதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார்.
இருதரப்பு வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளிலும், இந்த உறுதியாக வளர்ந்திருக்கிறது என்றும் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும், 680 மில்லியன் டொலரை அது எட்டியிருப்பதாகவும் மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.
எனினும், வர்த்தகச் சமநிலை மலேசியாவுக்குச் சாதகமாகவே இருப்பதாகவும், மலேசியாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
வர்த்தகத்தை மேலும் விரிவாக்குவதற்கு, முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்பாடு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதுதொடர்பான பேச்சுக்களை தமது அமைச்சர்கள் விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்.
சிறிலங்காவில் 47 திட்டங்களில் மலேசியா 3.1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சுக்களில், வர்த்தகம், முதலீடு, விவசாயம், போதைப் பொருள் மற்றும் மனித கடத்தல் குறித்த புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும், நானோ மற்றும் உயிரியல் தொழில்நுட்பம், இணைய வர்த்தகம், இணைய நீதிமன்றம், அனைத்துலக அரங்குகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
இந்தப் பேச்சுக்களின் போது இரண்டு புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.
இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா அதிபருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ராஜித சேனாரத்ன, சுசில் பிரேமஜெயந்த, மலிக் சமரவிக்கிரம, கயந்த கருணாதிலக, தலதா அத்துகோரள ஆகியோரும் பங்கேற்றனர்.