சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கச்சாய் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் இருப்பதால் இரவு வேளைகளில் நடமாட அச்சம் நிலவுகின்றது என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட கச்சாய் சாலை சுமார் 3 கிலோ மீற்றர் நீளமுடையது. அதில் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை தெருவிளக்குகள் ஒன்றுவிட்ட ஒரு கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்தன.
எஞ்சிய பகுதிகளில் முக்கியமான சந்திகளில் மட்டும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
அவற்றில் பெரும்பாலான இடங்களில் பொருத்தப்பட்ட தெருவிளக்குகள் பழுதடைந்து நீண்ட காலமாகியும் இன்னும் பொருத்தபபடவில்லை.
இதனால் சாலையெங்கும் இருளாக உள்ளன. சாவகச்சேரி நகரிலிருந்து கச்சாய் சாலை வழியாக கச்சாய் மற்றும் கெற்பேலி, பாலாவி, விடத்தற்பளை, கிளாலி போன்ற இடங்களுக்குச் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்ககின்றனர்.
அத்துடன் பிரதேசக் குடியிருப்பா ளர்கள் கட்டட வேலைகளுக்காக சாலையோரத்தில் கற்கள் பறித்து வைத்துள்ளனர். இதனால் இருளான வேளையில் சைக்கிள்களில் செல்வோர் கற்களுடன் மோதி வீழந்து பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும் சாலையின் இரு இடங்களில் கள்ளுத் தவறணை உள்ளதால் பெண்கள் இரவு வேளையில் சாலையில் செல்வதற்கு உறவினரின் உதவியை நாடவேண்டியுள்ளது. கச்சாய் சாலையானது சாவகச்சேரி நகரசபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளின் எல்லைகளைக் கொண்டுள்ளது. இரு சபையினரும் இணைந்து பயணிகளின் நன்மைகருதி இரவில் போக்கு வரத்துச் செய்யக்கூடிய வகையில் தெரு விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர்.
இது தொடர்பாக இரு உள்ளுராட்சி சபைகளிடம் தொடர்பு கொண்ட போது இந்த வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அடுத்த வருட செயற்றிட்டத்தில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தனர்.