மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கவிடம், நேற்று நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
2008ஆம் ஆண்டு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 444 மில்லியன் ரூபாவுக்கு எட்டு சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்காக, லலித் வீரதுங்கவை சிறப்பு காவல்துறை விசாரணை பிரிவு அழைத்திருந்தது.
நேற்றுக்காலை 9.45 மணி தொடக்கம், 1.45 மணிவரை அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மேவன் சில்வா தலைமையிலான அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே தேர்தல் காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் நிதியத்தில் இருந்த பணத்தை சில் துணிகள் வழங்குவதற்கு ஒதுக்கிய விவகாரத்தில் லலித் வீரதுங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.