வெறியோடு திரிபவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..!!

நேற்று இரண்டாவது நாளாக ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம் மேற்கொண்ட பகுதிகளில் எல்லாம் மக்கள் அளித்த உணர்ச்சிமிகு உற்சாக வரவேற்பை பார்க்கின்ற பொழுது ஆர்.கே.நகர் தொகுதியில் உதயசூரியன் நிச்சயம் உதிக்கத்தான் போகிறது என்பதை என்னால் உணர முடிந்தது என்று கூறி இருக்கிறார்.

மேலும் பிரச்சாரத்தில் பேசிய அவர், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உண்மையான உடல்நிலை குறித்து தெரிவிக்காமல் மூடி மறைக்கப்பட்டதற்கு காரணம் என்னவென்று கேட்டால் மூவரின் பதவி வெறி தான் என்பதை இன்றைக்கு நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பதவி வெறி பிடித்தவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ் ஆக இருந்தாலும், ஈ.பி.எஸ் ஆக இருந்தாலும், தினகரனாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவை பயன்படுத்தி கொள்ளையடித்தது மட்டுமல்ல, இந்த ஊரையே கொள்ளையடித்து உலையில் போட்டுவிட்டு இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குகள் கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க ஆர்.கே.நகர் மக்கள் தயாராகி விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் தொகுதி முழுவதும் மக்கள் நலப்பணிகள் எதுவும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு பல்வேறு பிரச்சினைகளில் இன்றைக்கு ஆர்.கே.நகர் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதி 17 ஆண்டுகாலமாக அதிமுக வசம் இருந்தது மட்டுமல்லாமல், கடந்த முறை ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது வி.ஐ.பி தொகுதியாக பேசப்பட்டது.

ஆனால் வி.ஐ.பி தொகுதி என்ற பெயருக்கு கூட எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களும் இங்கு செயல்படுத்தாதது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒன்று.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் உடனடியாக கலையப்பட வேண்டுமென சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரும், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளருமான மருது கணேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்குகள் அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்’ என்று கூறி அங்கு கூடியிருந்த திரளான மக்களிடத்தில் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.