ஆசனப் பங்கீடுகள் செய்யப்படாமலேயே கூட்டம் நிறைவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் வேட்பு மனுக்களைத் தயாரிப்பதற்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இறுதி செய்யப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

ITAK-444d-800x450தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம்  யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு(18) இடம்பெற்றது.

வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் எதிா்வரும்  வியாழக்கிழமை நண்பகல் 12 உடன் நிறைவிற்கு வருவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ் அரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர்  நேற்றிரவு 7 மணி முதல் சுமார் 2 மணிநேரம் ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்குமான ஆசனப் பங்கீட்டில் புளொட் கட்சிக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கூட்டத்திலிருந்து இடைநடுவே வெளியேறினார்.

இந்த நிலையில் எந்த ஆசனப் பங்கீடுகள் இறுதி செய்யப்படாமலேயே நேற்றைய  கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்றும்(19) செவ்வாய்கிழமை பேச்சுக்கள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.