நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவ மாணவியருக்கு 150 தொழிற் கல்வி பாடசாலைகள் மூலம் கல்வி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில், உரிய பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டு உயர் தரத்திற்கு தகுதி பெற்றுக்கொள்ள முடியாத இருபதாயிரம் மாணவ, மாணவியருக்கு, பதின்மூன்று ஆண்டு தொடர்ச்சியான கல்வித் திட்டத்தின் ஊடாக, இவ்வாறு 150 தொழிற்கல்வி பாடசாலைகள் மூலம் கல்வி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பாடசாலைகள் பற்றிய விபரங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு இந்த தொழிற்கல்வி பாடசாலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததாகவும், நாற்பது பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
26 தொழிற்கல்வி பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பாடங்களை கற்பிப்பதற்காக இரண்டாயிரம் ஆசிரியர்கள் விரைவில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவ, மாணவியரையும் உயர் தரத்தில் இணைத்துக் கொள்வதனை நோக்கமாக கொண்டே கல்வி அமைச்சு, இந்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.