நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடலோர பாதுகாப்பு கடற்படை கப்பல்கள், வெற்றிகரமாக தமது விஜயத்தை நிறைவுசெய்து,நேற்று(18.12.2017) நாட்டைவிட்டுப் புறப்பட்டன.
நாட்டைவிட்டு புறப்பட்ட பங்களாதேஷ் கடற்படையின் மன்சூர் அலி மற்றும் கமருசமன் என்னும் இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி அனுப்பிவைத்தனர்.
கடந்த சனிக்கிழமை (16.12.2017) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்களின் பணியாளர்கள், இலங்கையில் நங்கூரமிட்டிருந்த காலத்தில் பல நிகழ்வுகளிலும், இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள நட்பு கைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டு கப்பல்களிற்கும் இலங்கை கடற்படையால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மன்சூர் அலி மற்றும் கமாருஸமன் ஆகிய இரண்டு கப்பல்களும் 85 மீற்றா் நீளமும், 10.5 மீற்றா் அகலமும், கொண்டது. அத்துடன் இந்த கப்பலானது 89வீரர்கள் பயணிக்க கூடிய கொள்ளளவினைக் கொண்டதாகும்.
பங்களாதேஷ் கப்பலின் கேப்டன் மசூதுல் கரீம் சித்திக் மற்றும் கேப்டன் எஸ்சானுல்லா கான் ஆகியோருக்கும் இலங்கை கடற்படையின் அதிகாரிகளிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்றும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.