வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், நேர்மையான, ஊழலற்ற, சேவைமனப்பாங்குடைய, மக்களை நேசிக்கும், பண்பும் கொண்ட திறமையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.
“உங்கள் பிரதேசத்தை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நேர்மையும், திறமையும், ஊழலை வெறுப்பவராகவும், மக்களை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரிடம் இருக்க வேண்டிய தகைமைகள்.
எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. ஊழலற்ற உயர்ந்த குணங்களை உடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்.
கட்சி தவறு செய்தாலும், மக்கள் ஆதரவிருந்தால் அவர்கள் கட்சியையே மாற்றியமைப்பார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.