யாழ்ப்பாணத்தின் இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நூதனமுறையில் திருட்டுக்கள் இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது மழை பெய்து நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ள நிவாரனத்திற்கு உதவி வழங்குவதாகக் கூறி சிலர் வீடுகளுக்குள் பிரவேசத்து நூதன முறையில் திருடி வருகின்றனர்.இரு இளைஞர் குழுக்களாக வீடுகளுக்கு வரும் இவர்கள், தனிமையில் வசிக்கும் வயோதிபர்களை தாக்கி விட்டு, நகைகள் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்தும் திருடியும் செல்வதாகப் பொலிஸார் கூறினர்.கடந்த வாரம் அம்மன் வீதி பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வயோதிப் பெண்ணொருவரைத் தாக்கிய கொள்ளையர்கள் இருவர், அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச்சங்கிலியினை அறுத்தெறிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த, 38 வயதுடைய இரத்தினம் என்பவர், கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே இனந்தெரியாத நபர்கள் யாராவது வீடுகளுக்கு நுழைந்தால் அவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் பொலிஸார், அவர்களின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் பொலிஸாருக்கு தகவல் தருமாறும் வேண்டப்படுகின்றனர். மேலும் பகல் நேரத்தில் வீட்டின் வெளிக்கதவினை பூட்டுவதுடன், உள் கதவினையும் பூட்டிவிட்டு ஏனைய வேலைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.