முதலாவது விமான நிலையத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

Ratmalana-Airportஇலங்கையின் முதலாவது விமான நிலையமான இரத்மலானை விமான நிலையத்தில் சிவில் விமான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்கு பிரதேசத்திலுள்ள 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியினை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1938ஆம் ஆண்டில் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது விமான நிலையம் இதுவாகும்.

1961ஆம் ஆண்டில் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் வரை, தேசிய மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்காக இரத்மலானை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது.

1860 நீளத்தையும் 45 மீற்றர் அகலத்தையும் கொண்ட விமான ஓடுபாதை இங்கு உண்டு. இது 460 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

கொழும்புக்கு அருகாமையிலுள்ள இந்த விமானநிலையத்தை சிவில் விமான நடவடிக்கைகளுக்காக விரிவுபடுத்துவதன் மூலம் பெரும் நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இலங்கை விமானப்படையின் முகாமின் பகுதியொன்றை இலங்கை விமானப்படையினரின் இணக்கத்துடன், விமான நிலையத்தின் வட பகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.