சிறைக்கு வந்தபோதுகூட இவ்வளவு வேதனைப்பட்டதில்லை!’ – குமுறிய சசிகலா

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை முன்வைத்து உச்சகட்டமாக மோதிக்கொண்டிருக்கின்றனர் தினகரன், விவேக் தரப்பினர். ‘ சிறைக்குள் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. ‘ சிறைக்குள் கால்வைத்தபோதுகூட நான் இவ்வளவு வேதனைப்பட்டதில்லை’ என இளவரசியிடம் வேதனைப்பட்டார்’ என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

_93179468_pict0220அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சி ஒன்றை நேற்று வெளியிட்டார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். ‘அம்மா குறித்து பரப்பப்படும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதால்தான் இந்தக் காட்சிகளை நான் வெளியிடுகிறேன்’ என விளக்கமும் கொடுத்தார். இந்த விளக்கத்தை திவாகரன் தரப்பினர் ஏற்றுக்கொண்டாலும், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் உள்பட இளவரசி சொந்தங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. டி.டி.வி தினகரனின் கீழ்த்தரமான செயல் எனப் பதிவிட்ட இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, சிறிது நேரத்திலேயே டி.டி.வி உடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என மாற்றிப் பதிவிட்டார். இதையடுத்து, பத்திரிகையாளர்களிடமும் கொதிப்பைக் காட்டினார் கிருஷ்ணபிரியா. இந்தப் பேட்டி வெளியான அடுத்த சில மணிநேரங்களில் மீடியாக்களை சந்தித்த திவாகரன் மகன் ஜெயானந்த், ‘ வெற்றிவேலின் நோக்கத்தைக் குறைசொல்ல முடியாது. இதற்கான காரணத்தை சசிகலாவும் ஏற்றுக் கொள்வார்’ என தினகரனுக்கு ஆதரவாகப் பேட்டியளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இதுபோன்ற யுக்தியை தினகரன் கடைபிடித்தார். இப்படியொரு வீடியோ காட்சியை ஆளும்தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இந்தக் காட்சிகளால் இடைத்தேர்தல் களத்தை மாற்றியமைக்க முடியாது’ என அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கினர்.

விவேக் ஜெயராமன்” வீடியோ வெளியானதால் யாருக்கு லாபம் என்பதைவிட, தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் மாபெரும் விரிசல் ஏற்பட்டுவிட்டது. தினகரனோடு அவ்வப்போது முரண்பட்டு வந்தாலும், ஜெயா டி.வியில் தினகரனின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தார் விவேக். ஜெயா டி.விக்கு தினகரனே தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் இந்தளவுக்குச் செய்தி வெளியிட்டிருக்க முடியாது. விவேக்கின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், வீடியோவை வெளியிட்டு அவசரப்பட்டுவிட்டார் தினகரன்” என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசும்போது, ” நேற்று வெற்றிவேல் வீடியோவை வெளியிட்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்த விவேக், பெங்களூரில் உள்ள தனது ஆதரவாளர்களான வினோத் ராஜ், செல்வம் ஆகியோரைத் தொடர்பு கொண்டார். ‘ உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டுத்தான் இந்த வீடியோக்களைப் பெற்றுக்கொண்டேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கேட்டால் கொடுங்கள் என்று சொல்லித்தான் தினகரனிடம் கொடுத்தேன்.

தினகரன்அவரும் ரகசியத்தைக் காப்பார் என நினைத்தேன். தேர்தலுக்கு முதல்நாள் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுவிட்டார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்’ என்ற தகவலை சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர்கள் இருவராலும் நேற்று சசிகலாவைச் சந்திக்க முடியவில்லை. நேற்று எந்தப் பார்வையாளரும் சசிகலாவை சந்திக்கவில்லை. இதையடுத்து சிறையில் உள்ள சிலர் மூலம் தகவலைக் கொண்டுசெல்ல முயற்சி செய்துள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவின் மனநிலையை அவர்கள் விளக்கியுள்ளனர். ‘ வழக்கமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார். இந்த வீடியோ காட்சியைப் பார்த்துவிட்டு புலம்ப ஆரம்பித்துவிட்டார். ‘ அக்காவை இப்படியொரு கோலத்தில் காட்டக் கூடாது என இவ்வளவு நாள் ரகசியத்தைப் பாதுகாத்து வந்தேன். நம்மைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்? ஜெயிலுக்கு வந்தபோதுகூட நான் இந்தளவு வேதனைப்பட்டதில்லை. இப்படிச் செய்துவிட்டார்களே…’ என இளவரசியிடம் அழுதிருக்கிறார். மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்’ எனக் கூறியுள்ளனர். இந்தத் தகவலை விவேக் ஜெயராமனுக்குச் சொல்லியுள்ளனர். இன்னும் சில நாள்களில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்கவிருக்கிறார் விவேக்” என்றனர் விரிவாக.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்களோ, ” வீடியோ வெளியானதற்கான காரணத்தை வெற்றிவேல் விளக்கிக் கூறிவிட்டார். இதையும் தாண்டி கிருஷ்ணபிரியா பேசிய வார்த்தைகளை டி.டி.வியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பேட்டிக்கு முன்பாகவே கிருஷ்ணபிரியாவைத் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தார். டி.டி.வியின் செல்போன் அழைப்பை நிராகரித்துவிட்டார். தொடர்ந்து அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்ட டி.டி.வி, ‘ தேர்தலுக்கு முதல்நாள் குடும்பத்தில் உள்ளவர்களே இப்படிச் செய்தால், மக்கள் என்ன நினைப்பார்கள்’ என ஆதங்கப்பட்டார். இளவரசி குடும்பத்தை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றார்; முடியவில்லை” என்றார்.

‘ வீடியோ ரிலீஸ் செய்வதால் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றம் ஏற்படும்’ என எதிர்பார்த்துக் காத்திருந்த டி.டி.விக்கு, அதற்கான விடை என்ன என்பது வாக்குப் பதிவு நாளில் தெரிந்துவிடும்.