மனித நடவடிக்கைகளின் அசிரத்தையினாலேயே டெங்கு நுளம்புகள் பல்கிப் பெருகுகின்றன என, சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூரில் இன்று வியாழக்கிழமை (21.12.2017) இடம்பெற்ற டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
டெங்குக் காய்ச்சலை குணப்படுத்த விஷேட சிகிச்சை முறைகள் அல்லது நிர்ப்பீடனம் எதுவும் இல்லை. ஆனால் அதனை முற்றாக வராமல் தடுக்கலாம். நுளம்புகளையும், நுளம்பு பெருகும் இடங்களையும் இல்லாதொழிப்பதே இதற்குச் சரியான தீர்வாகும் என ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். புலேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், டெங்கு காய்ச்சலானது ஈடிஸ் எனப்படும் ஒரு வகை நுளம்பினால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்நுளம்பு, பகல் வேளையில் குறிப்பாக, காலை மாலை வேளைகளில் மனித இரத்தத்தை உறுஞ்சுகின்றது.இவ்வகையான நுளம்புகள் சுத்தமான நீர் தேங்கியுள்ள இடங்களிலும், பயன்படாத பொருட்களிலுமே முட்டையிடுகின்றன.
மனித நடவடிக்கைகளும் அந்த நடவடிக்கைகளினால் ஏற்படும் பின் விளைவுகளுமே டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குத் ஏதுவாய் அமைந்து விடுகின்றது. நமது வீடு, வீட்டுச் சூழவுள்ள இடங்கள் மற்றும் பொது இடங்களை ஒவ்வொருவரும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி சீர் தூக்கிப் பார்ப்பார்களாயின் டெங்கு நுளம்புகள் அற்ற பிரதேசமாக நாம் வெற்றிக் கொடியைப் பறக்க விடலாம்.
வீட்டையும் வீட்டுச் சுற்றாடலையும் துப்புரவாகப் பேணுவதிலும் பராமரிப்பு வேலைகளைச் செய்வதிலும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ‘சுத்தமான பிரஜைகள்’ என்ற அடிப்படையில் கடமைகளை பங்கு போட்டுச் செய்ய வேண்டும்.
வீட்டையும் வீட்டுச் சூழலையும் பெண்கள்தான் சுத்தமாகப் பேண வேண்டும். பிரதேச நகரச் சூழலை நகர சுத்தித் தொழிலாளர்கள் மாத்திரம்தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற மன நிலை இருக்குமாக இருந்தால் டெங்கு நம்மை சூழ்ந்து கொண்டு தாக்குவதில் ஆச்சிரியம் இருக்க முடியாது.
ஏனெனில் டெங்கு நுளம்புகள் 500 மீற்றருக்குட்பட்ட சுற்றாடலுக்குள் பறக்கக் கூடியவை, ஆகவே அவை தமது பறப்பெல்லைக்குள் ஆண், பெண், சிறுவர், வயோதிபர், நோயாளி, இனம், மதம், சாதி மொழி அடிப்படை பார்த்து தாக்குவதில்லை.
மனிதர்கள் அகப்பட்டால் கடித்து விடும். ஆகவே, இன மத பேதம் தெரியாத டெங்கு நுளம்புகளால் மனிதர்கள் எல்லோரும்தான் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டின் பெறுமதி மிக்க மனித உயிர்கள் கொடிய டெங்கு நுளம்புகளால் வருடாந்தம் காவுகொள்ளப்படுகின்றன. இதனை அறிவுடைய மனிதர்கள், ஆண், பெண், இன, மதம் என்ற வேறுபாடின்றி எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே டெங்கு நோயிலிருந்து நீங்கள் பாதுகாப்பு பெறுவதுடன் உங்களை நேசிப்பவர்களையும் பாதுகாப்புப் பெறச்செய்யுங்கள் ‘என்றார்.