வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு, கடந்த பத்து மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கிலுள்ள தமிழ் உறவுகளின் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர்களுக்கான உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சி பாராமன்ற உறுப்பினர்களின் குழுவே ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக வடக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழர்களுக்கான பிரித்தானிய பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சி பாராமன்ற உறுப்பினர்களின் குழுவின் தலைவர் போல் ஸ்கெலி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
300 நாட்களையும் கடந்து கடும் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் வயோதிபத்தையும் பொருட்படுத்தாது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மன வலிமைக்கு தாம் தலை வணங்குவதாக போல் ஸ்கெலி குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ள இந்த மக்களின் தொடர் போராட்டத்திற்கு எந்தவிதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காது ஸ்ரீலங்கா அரசாங்கம் காண்பித்துவரும் உதாசீனமான போக்கு, அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்றும் போல் ஸ்கெலி சுட்டிக்காட்டியுள்ளார்.