2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஊழலாகவும், ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு.
ஆனால், சிபிஐ தொடர்ந்த வழக்குகள் மற்றும் அமலாக்கத்துறை வழக்கு என்று மூன்றிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது.
பண மோசடி செய்யப்பட்டதற்கான போதிய ஆதாரங்களை சிபிஐ தரப்பிலிருந்து சமர்பிக்கப்படாததால், இந்த வழக்கில் மோசடி இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் 17 எதிரிகள் மீதான குற்றச்சாற்றுகளை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் சிபிஐ மிக மோசமாகத் தோல்வியடைந்து விட்டதாகவும், ஐயத்தின் பலனை குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு வழங்கி விடுதலை செய்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிபிஐ தரப்பு குற்றச்சாற்றுகளை நிரூபிக்க தவறியதால், சிபிஐயின் குற்றச்சாற்றை மையமாக வைத்து தொடரப்பட்ட அமலாக்கத்துறையின் வழக்கில் இருந்தும், அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி கூறியுள்ளார்.