பிங்கிரிய – மொரகொல்ல, நகொல்லகொட பிரதேசத்தில் நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் குலியாபிடிய குற்றத் தடுப்பு பிரிவினர் இரண்டு பெண்களை சரமாரியாக தாக்கி ஒரு பெண்னை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவினர் தங்களது வீட்டிற்கு வந்து தனக்கும் தனது மகளையும் மிரட்டி வீட்டிலிருக்கும் போதை பொருட்களை தருமாறு சித்திரவதை செய்ததாக 75 வயது நிரம்பிய பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த தாயையும் மகளையும் மிரட்டி வீட்டில் வைத்திருக்கும் போதைப் பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு தங்களிடம் அவ்வாறான பொருட்கள் எதுவும் இல்லை என கூற தாயையும், மகளையும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான இருவரும் கீழே விழ மகளை அதிகாரிகள் இழுத்துக் கொண்டு சென்று அவர்கள் வந்த வாகனத்தினுள் ஏற்ற முயற்சிக்கும் போது மகள் அணிந்திருந்த ஆடை நழுவி கீழே விழுந்துள்ளது.
இளம் பெண்ணின் ஆடை நழுவி கீழே விழுவதை கூட பொருட்படுத்தாது அதிகாரிகள் குறித்த பெண்னை சரமாரியாக தாக்கி வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர்.
தனித்து பெண்கள் மட்டும் வாழ்ந்து வரும் தங்களது வீட்டிற்கு இதற்கு முதல் குற்றத்தடுப்பு பிரிவினர் எவரும் வந்ததில்லை எனவும் கடந்த காலங்களில் அவ் வீட்டில் சட்ட விரோத மதுபானம் தயாரித்ததாகவும், தற்போது அதை நிறுத்தி விட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கேட்ட போது ,
“சட்ட விரோத மதுபானம் தயாரித்த குழுவை சுற்றிவளைக்க முயற்சித்த போது தங்களது பணிக்கு தடை விதித்த பெண் ஒருவரை கைது செய்து பிங்கிரிய பெலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம்” என்றனர்.
எது எவ்வாறு இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தனது கைத் தொலைப்பேசியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அவ் வீடியோ காட்சியில் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த மூன்று பெண்களையும் தாக்குவது மற்றும் முறைகேடாக நடந்து கொள்ளும் விதம் என்பன பதிவாகியுள்ளது.
பரவலாகிய குறித்த வீடியோவின் பின்னர் குலியாபிடிய குற்றத்தடுப்பு பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.