2017 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் முடிவடைகின்றது . பரீட்சை முடிவடைந்ததும் பரீட்சார்த்திகள் அமைதியாக வீடு திரும்ப வேண்டுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் இம்முறை சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக கூறிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுராதபுரம் மற்றும் நாரஹேன்பிட்டிய பகுதியில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பரீட்சார்த்திகள் தொடர்பிலான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பரீட்சைக்குப் பின்னர் எவரேனும் தன்னிச்சையாக செயற்பட்டு சட்ட திட்டங்களை மீறும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பரீட்சையை சிறப்பாக நடத்துவதற்கு பாதுகாப்புப் படையினரும், தபால் திணைக்களமும், வளிமண்டலவியல் திணைக்களமும் வழங்கிய உதவிகளுக்காக அவர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
அத்தொடு சீரற்ற காலநிலையால் நெடுந்தீவிற்கு வினாத்தாள்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்ட போது அதனை தீர்ப்பதற்கு கடற்படையினரும், விமானப் படையினரும் உதவி செய்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த சுட்டிக்காட்டினார்.