கணவன் சடலத்துடன் நாள் முழுக்க தனியாக இருந்த மனைவி: காரணம்

கணவன் சடலத்துடன் நோய்வாய்ப்பட்ட வயதான மனைவி 24 மணி நேரம் தனியாக இருந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முசாபூர்நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆத்மராம் கார்க் (78) என்ற முதியவர் தனது மனைவி ஓம்வதி (72) என்பவருடன் அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும், வெவ்வேறு நகரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் வீட்டு கட்டிலில் படுத்திருந்த ஆத்மராம் தவறி கீழே விழுந்து இறந்துள்ளார்.

அடுத்தநாள் காலை எழுந்து கணவர் சடலமாக கிடப்பதை பார்த்த ஓம்வதி இது குறித்து யாருக்கும் தகவல் கொடுக்காமல் கணவர் அருகிலேயே நாற்காலியில் அமர்ந்தவாறு நாள் முழுக்க இருந்துள்ளார்.

வயதான தம்பதியின் வீட்டு கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கதவை உடைத்து பார்த்த போது ஆத்மராம் சடலமாக கிடந்தார்.

அப்போது தான் அவர் மனைவியால் எழுந்து நடக்க முடியாது எனவும், குனிந்து கணவரை கூட தொடமுடியாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து தம்பதியின் மகன்களுக்கு பொலிசார் தகவல் கொடுத்தும் அவர்கள் அங்கு வர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ஆத்மராம் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

கடைசி காலத்தில் முதிய தம்பதியை பராமரிக்க ஆள் இல்லாததால், நடந்த இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.