தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறியமைக்கு காரணம் இதுவே!

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)வட கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கும் உரிய பிரச்சினையாக இன்று மாறியுள்ளதாக மண்முனைப்பற்று பிரதேச சபைக்காக சுயேட்சையாக போட்டியிடும் சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

பல்வேறு அவமதிக்களுக்கு மத்தியிலும் தமிழரசு கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளேன். அண்மையில் வேட்பாளர் தெரிவுகள் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் மண்முனைப்பற்று, மட்டக்களப்பு தொகுதிகளின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்த போதிலும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் இணக்கப்பாடு அடிப்படையில் மண்முனைப்பற்று தவிசாளர் பதவியை புளொட்டுக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் புளொட் அமைப்புக்கு எவ்வித ஆதரவாளர்களோ, உறுப்பினர்களோ இல்லாத நிலையில் இந்த இணக்கப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டுக்கொண்டேன்.

எனினும் அதனை செய்ய அவரால் முடியவில்லை. தற்போது ரெலோ அமைப்பில் இருந்த மாணிக்கராஜா புளொட் அமைப்பு ஊடாக மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு தவிசாளராக வரக்கூடிய வகையில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பச்சோந்தித் தனமாக ரெலோவில் இருந்து தமிழரசுக்கட்சிக்கும் தமிழரசுக்கட்சியில் இருந்து புளொட்டுக்கும் போகின்ற மனநிலை என்னிடம் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி மாற்று தூய தமிழரசுக்கட்சியை கொண்டுசெயற்படவுள்ளேன்.

நான் தமிழரசுக்கட்சியில் இருந்துவெளியேறியதையறிந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளில் இருந்து என்னை அணுகி தங்களது கட்சியில் போட்டியிடுமாறு கூறினர்.

ஆனால் எனது நோக்கம் முழுவதும் தமிழரசுக்கட்சியின் தலைமைகள் எடுத்த தீர்மானம் மக்கள் கருத்துகளுக்கு முரணானது என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.

தமிழரசுக்கட்சி மக்களின் கருத்தினை அறிந்து அதற்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்பதை உணரவைப்பதற்கே நான் சுயேட்சைக்குழுவில் இறங்கியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.