ஜனநாயகக் கொங்கோ குடியரசின் ஜனாதிபதியாக நீண்டகாலமாக ஆட்சியில் இருந்துவரும் ஜோசப் கபிலாவை ஆட்சியிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி, எதிர்கட்சியினர் நடத்திவரும் போராட்டங்களை அடுத்து 2016 ஆம் ஆண்டு அங்கு வன்முறைகள் வெடித்தன.
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபர் பதவியில் இருக்கும் ஜோசப் கபிலாவின் இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்ததும், அவர் குறித்தப் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் கபிலா இதனை நிராகரித்து மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடப் போவதாக அறிவித்ததை அடுத்தே மோதல்கள் வெடித்தன.
இந்த நிலையில் 2016 செப்டெம்பர் மாதம் சிப்டேய்ன் பழங்குடியின சமூகத்தினரால், கொங்கோ குடியரசு இராணுவ சிப்பாய்கள் சிலர், படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தலைநகர் கின்ஷாஷா உட்பட நாட்டின் பல இடங்களில் கம்வீனா நஸாபு என்றழைக்கப்படும் சிப்டேய்ன் பழங்குடியின மக்கள் மீது, மிகவும் கொடூரமாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதற்கமைய இதுவரை, 3300 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் இராணுவம் உட்பட, அரச படையினரும் அவர்களினால் இயக்கப்படும் துணை ஆயுதக் குழுக்களினாலும், எதிர்கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மிகவும் கொடூரமான படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டுகின்றது.
கொங்கோ குடியரசு இராணுவம் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் கொடூரங்களுக்கு முகம்கொடுத்த பலர் அளித்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் சர்வதேச மனித உரிமை அமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரையும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டிற்கு அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.