திரை விமர்சனம் – வேலைக்காரன்

1492713028தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை திருப்திப்படுத்தும். அப்படி தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் 10வது படமான வேலைக்காரனிலும் ஹிட் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது.

நம் கண்முன்னே ஒரு சமுதாயம் கெட்டு போவதை பார்க்கும் அவர், ஒரு ரேடியோ ஐடியா மூலம் ஒரு சில வேலைகளை பார்க்கின்றார். ஆனால், அது பிரகாஷ்ராஜுக்கு கோபத்தை ஏற்படுத்த அந்த ஐடியாவை இழுத்து மூடி ஒரு சேல்ஸ் வேலைக்கு செல்கின்றார்.

அந்த கம்பெனியில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் புரிந்து வேலை செய்ய, ஒரு கட்டத்தில் தன்னால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனையை சந்திக்கவிருக்கின்றது என்பதை உணர்கின்றார்.

அதை தொடர்ந்து ஒருவன் HardWork, ஸ்மார்ட் Work என எதுவும் செய்ய தேவையில்லை, Good Work செய்தால் போதும் என்பதை சிவகார்த்திகேயன் பல முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டுவதே இந்த வேலைக்காரன்.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் முதன் முதலாக தன் எல்லையை மீறி இறங்கி அடித்துள்ளார். தான் நினைத்தால் இரண்டு காமெடி, மூன்று பாட்டிற்கு டான்ஸ் ஆடி படத்தை ஓட்டி விடலாம் என்றில்லாமல், மக்களுக்கு தேவையான ஒரு கதைக்களத்தை எடுத்து கலக்கியுள்ளார், காமெடி என்றில்லாமல் சீரியஸ் காட்சிகளில் பல இடங்களில் அசத்தியுள்ளார், அதிலும் தன் வீட்டிலேயே பொருளை விற்க வரும் மார்கெட்டிங் பாய் அப்துலிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் சிவா.

பஹத் பாசிலும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, கடைசி வரை சட்டை கூட அழுக்கு ஆகாமல் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். இவர்களை தவிர படத்தில் மினி கோடம்பாக்கமே இருக்கின்றது, ஆனால், சார்லி, ரோகினி, விஜய் வசந்த் தவிர பெரிதும் யாரும் மனதில் பதியவில்லை.

படத்தின் கதைக்களம் இன்றைய மக்களின் அடிப்படை தேவைகள் அதிலும் ஒரு மிடில் க்ளாஸ் மக்களை எப்படி ஒரு மார்க்கெட்டிங் செய்து தங்கள் பொருட்களை பெரிய கம்பெனிகளை வாங்க வைக்கின்றார்கள் என்பதை க்ளாஸ் எடுத்துள்ளார் மோகன்ராஜா. அதிலும் பஹத் பாசில் ஒரு காட்சியில் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருள் எங்கே இருக்க வேண்டும் என்பதை விளக்கும் காட்சி ஒரு நொடி புருவம் உயர்த்த வைக்கின்றது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் திண்பண்டங்கள் என அனைத்திலும் இத்தனை அரசியல் உள்ளதா? என்பதை நம்மையே அச்சப்படுத்துகின்றது. அதற்கு படத்தின் வசனமும் மிகப்பெரிய பலம், அத்தனை பவர்புல்லாக இருக்கின்றது.

முன்பு நாம் தவறு என்று பயந்து செய்த விஷயத்தை இந்த தலைமுறை மிக சந்தோஷமாக கொண்டாடி செய்கின்றது. வேலைக்காரன் என்னைக்கும் முதலாளியை நம்புகிறான், ஆனால், முதலாளி தான் நம்மை நம்பாமல் கேமரா வைத்து நம்மை நோட்டமிடுகின்றான் என்ற வசனம் எல்லாம் விசில் பறக்கின்றது. அதே சமயம் வசனத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் தனி ஒருவன் போல் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.

அனிருத்தின் இசையில் கருத்தவெல்லாம் கலீஜா தாண்டி எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணியிலும் கொஞ்சம் தடுமாறியுள்ளார், ராம்ஜியின் ஒளிப்பதிவில் செட் போட்டு எடுத்து குப்பம் கூட ரியலாக தெரிகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்.

சிவகார்த்திகேயன், பஹத் பாசிலின் நடிப்பு, ராம்ஜி ஒளிப்பதிவு, ஆர்ட் Work பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஒரு இடத்தில் கூட செட் என்று தெரியவில்லை.

பல்ப்ஸ்

இத்தனை வலுவாக கதைக்களம், வசனம், நடிகர்கள் அமைந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.

நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் எதற்காக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் வேலைக்காரன் இனி ஒரு பொருள் வாங்கும் முன் ஒரு நொடி எல்லோரையும் யோசிக்க வைத்து விடுவான்.