யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும் என தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் தலைவர் அனுப்பியுள்ள கண்ட அறிக்கையில்…
இன்று(22) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயானங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை.
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும்.
குறிப்பாக தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப் படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும்.
எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மாயனத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவனை செய்ய வேண்டும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.