இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது.
அதன்பிறகு 1967ஆம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எகிப்து சார்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில் இந்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து ட்ரம்ப் பேசும்போது,
”நாங்கள் எங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வாக்களிக்கட்டும். எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. அவர்களால் எங்களுக்கு சேமிப்புதான்” என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்று வருகிறது.