ஜெயலலிதா சிகிச்சை வீடியோவின் புலன் விசாரணை இன்னும் முடிக்கவில்லை நெட்டிசன்கள். தென்னை மரம் தொடங்கி முதல் மரியாதை பாடல் வரிகள் வரையில் வகை தொகை இல்லாமல் பிரித்து மேய்ந்து வருகிறார்கள்.
அப்போலோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவில் இடது கையைதான் அவர் பயன்படுத்துகிறார். வலது கையில் பிரஷர் செக் செய்யும் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் இடது கையில் ஜெயலலிதா ஜூஸ் பருகுகிறார். ஆனால், எப்போதுமே இடது கையில்தான் குடிநீர், தேனீர், பழரங்கள் ஆகியவற்றை ஜெயலலிதா பருகி வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசாரம் சில இடங்களில் மட்டுமே நடைபெற்றது. அதற்கு காரணம் அவரின் உடல்நிலை. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2016 பிப்ரவரியில் கட்சிப் பிரமுகர்கள் இல்லத் திருமணத்தை ஜெயலலிதா நடத்திவைத்தார். அன்றைய அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், முக்கூர் என்.சுப்பிரமணியன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்திவைத்தார் ஜெயலலிதா. மாநாடு ரேஞ்சுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. அரங்கம் முழுவதும் ஏஸி வசதி செய்திருந்தார்கள். மேடையும் பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் ஜெயலலிதா, மேடையில் ஏறுவதற்காக நீண்ட தூரத்தில் இருந்து சரிவு பாதை போடுவார்கள். 2015-ம் ஆண்டு இறுதி கட்டத்தில் மேடையில் ஜெயலலிதா ஏறுவதற்காக மொபைல் லிப்ட்டை ஏற்பாடு செய்தார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக லிப்ட் எதையும் போடவில்லை. ஜெயலலிதாவின் கார் மேடைக்கே வரும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். மேடையில் ஜெயலலிதா உட்கார்ந்திருந்த இருக்கைக்கும் கார் நின்ற இடத்துக்கும் ஒருசில அடி தூரம்தான் இருக்கும். 14 திருமணங்களை நடத்திவைத்தபோது ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு ஜோடியாக மேடைக்கு அழைக்கப்பட்டபோது இருக்கையில் அமர்ந்துவிட்டு பிறகு எழுந்து திருமணத்தை நடத்திவைத்தார். ஜெயலலிதாவின் இருக்கைக்கு பக்கத்திலேயே மைக் போடியத்தைத் தூக்கி வந்து வைத்தார்கள். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதாவால் சில அடி தூரம்கூட நடக்கச் சிரமப்பட்டார்.
அந்த திருமண விழாவில்தான் இதுவரை நடக்காத ஒரு விஷயம் நடந்தது. பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது ஜெயலலிதா எதுவும் சாப்பிடமாட்டார். அருந்தமாட்டார். சட்டசபையில் மட்டும் பிளாஸ்க்கில் வைத்து பழரசம் சாப்பிடுவார். ஆனால், அந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றபோது இரண்டு பிளாஸ்க்கில் ஹெல்த் ட்ரிங்ஸ் கொண்டு வரப்பட்டன. அதை டீபாயில் வைத்திருந்தார்கள். அதை ஸ்ட்ரா வைத்துக் குடித்தார். அவர் பொதுவெளியில் இப்படி அருந்தியதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள். ஹெல்த் டிரிங்ஸ் ஜெயலலிதாவின் புடவையில் சிந்தி தரையிலும் விழுந்தது. கர்சிப்பால் புடவையைத் துடைத்துக் கொண்டார். தரையில் கொட்டியதை உதவியாளர்கள் உடனே சுத்தம் செய்தார்கள். அந்த ஹெல்த் டிரிங்ஸை இடது கையில் பிடித்துதான் குடித்தார். அப்போதும் ஸ்ட்ரா போட்டுதான் குடித்தார். ஹெல்த் ட்ரிங்ஸ் முதலில் ஜெயலலிதாவின் வலது பக்க டீபாயில்தான் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அதை இடது பக்கமாக மாற்றி வைத்தார்கள். இந்தக் காட்சிகளை அன்றைக்கு ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது. அந்த போட்டோவையும் இன்றைய வீடியோவையும் மேட்ஜ் செய்தால் அது ஜெயலலிதாதான் என உறுதியாக சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.