ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
“2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மூவாயிரம் அதிகாரிகளை நியமிப்பதற்கு தீர்மானித்து, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென நிதி அமைச்சின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளோம். அரச நிறுவனங்களுக்கு சென்று தாய் மொழியில் அனைத்தையும் பெறுவதற்கான உரிமை அரசியலமைப்பில் தற்போதும் உள்ளது. எனினும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தமிழ் மாத்திரம் தெரிந்தவர்கள் வந்து எழுத்துமூலம் தமிழில் பதிலை பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேபோன்று சிங்களவர்கள், யாழ்ப்பாணம் மட்டக்களப்பிற்கு சென்றால் சிங்கள மொழியில் பதிலை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அது உண்மை. தெரிந்தே அரசியலமைப்பின் சரத்துக்களை மீறுகின்றோம்.” என்றார்.
மேலும், “அழகாக அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அரச ஊழியர்கள் கட்டாயம் மொழியை கற்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்க எனக்கு விரும்பம் இல்லை. உரிய மொழியில் பதிலை வழங்குவதற்கு அரச அதிகாரிகளுக்கு முடியாவிடின், அதற்காகவே மொழிசார் உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும் தமிழில் எழுதுவதற்கு பேசுவதற்கு தெரிந்தவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, மொழியை கற்கும் அரச ஊழியர்களுக்கு விடேச கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், இரண்டாம் மொழி அல்லது மூன்றாம் மொழியில் தேர்ச்சி இருந்தால் ஏனையவர்களை விட முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.