பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான்ஜெயலலிதாவின் மகள் என்று கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி, அவர் சிகிச்சைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும் அவர் சோபன் பாபுவின் மகள் இதுவரை உரிமை கோராதது ஏன் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற 37 வயதுப் பெண் ஒருவர், தான் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்றும் ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து, அவர் பிறந்த ஐயங்கார் சமூக வழக்கப்படி தகனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்றும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
மேலும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் ஒரு திருத்திய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், தான் ஜெயலலிதாவுக்கு சகோதரி முறையிலான சைலஜா மற்றும் அவரது கணவர் சாரதியால் சொந்தக் குழந்தை போல வளர்க்கப்பட்டதாகவும் கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று சாரதி இறந்தபோதுதான் இந்த ரகசியத்தைத் தன்னிடம் சொன்னதாகவும் தெரிவித்திருந்தார்.
1996 ஜூன் மாதம் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சென்று சந்தித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி, ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும் அவரது அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால் இது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியிருந்தார்.
அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அம்ருதாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; ஆகவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென மாநில அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
டிஎன்ஏ சோதனை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது?
மறைந்த முதல்வரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தனக்கு விளம்பரம் தேடும் நோக்கத்திலும் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்திருப்பதாக மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிட்டார்.
தான் ஜெயலலிதாவின் மகள் என அவர் சொல்லிக்கொள்வதைத் தவிர, அந்தக் கூற்றை நிரூபிக்க வேறு எந்த ஆதாரமுமே இல்லை என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் டிஎன்ஏ சோதனை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது என நீதிபதி கேள்வியெழுப்பிய ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அவர் சிகிச்சைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வியெழுப்பினார்.
அரசுத் தரப்பின் கருத்தை அறிந்துதான் இதற்குப் பதில் சொல்ல முடியுமென அரசுத் தரப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி அம்ருதா தரப்பைப் பார்த்து, பிரமாணப் பத்திரத்தில் சோபன் பாபுவின் மகள் என்று சொல்லியிருக்கும் நிலையில் அதற்கு உரிமை கோராமல், ஜெயலலிதாவின் மகள் என்பதற்கு மட்டும் உரிமை கோருவது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.
அம்ருதாவின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் வி. பிரகாஷ், விளம்பரத்திற்காக இந்த வழக்கைப் பதிவுசெய்யவில்லையென்றும் ஜெயலலிதா தனது தாய் எனக் கூறும் அம்ருதாவின் கோரிக்கையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென வாதிட்டார்.
மேலும் சோபன் பாபு இறந்து வெகுகாலமாகவிட்டதால் அதைக் கோரவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டுமெனக் அம்ருதாவின் சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.